தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியுள்ளது. படம் ஜூலை 23 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் விஜய்யின் கடைசித் திரைப்படம் என குறிப்பிடப்படுகிறது. அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே படம் வெளியாக வேண்டியிருந்தாலும், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக வெளியீடு தாமதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகப் பதவியேற்ற பின்னர் தற்போது படம் திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இதற்கிடையில், பிற மாநிலங்களில் சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவு தொடங்கி முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் காலை 6 மணிக்கான சிறப்புக் காட்சி டிக்கெட் ரூ.1,800 வரை விற்பனையாகி, முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் தீர்ந்ததாக தகவல்.

தமிழக முன்பதிவு தொடங்கியதை தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் ப்ரொடக்ஷன் எக்ஸ் தளத்தில் அறிவித்து, “கொண்டாட்டத்தை துவங்கலாம் நண்பா, நண்பீஸ்” என பதிவிட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் படத்தின் வசூல் குறித்து பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.