உலகின் முக்கிய அணுக்கரு முயற்சிகளில் இந்தியாவும் முன்னணி நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது; அந்த திட்டங்களில் உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்திய கொடியும் பெருமையுடன் பறக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மதுரையில் சி.ஐ.ஐ. யங் இந்தியன்ஸ் அமைப்பு நடத்திய தேசிய நிதி தொழில்முனைவோர் மாநாட்டில் பேசிய அவர், உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் தொடர்பான மோதல்கள் காரணமாக சரக்கு கப்பல்கள் நேரத்தில் வந்து சேராத நிலை ஏற்பட்டதாக கூறினார். எண்ணெய், எரிவாயு சிக்கல்களால் உரங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக திகழ்கிறது என அவர் கூறினார். பிரான்ஸ் நாட்டுத் தொழில்முனைவோரும் இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகச் சொல்லி, இளைஞர்கள் தயக்கங்களை உடைத்து தொழில்முனைவோராக முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரான்சில் நடைபெறும் சர்வதேச ஐ.டி.இ.ஆர். (ITER) அணுக்கரு இணைவு ஆராய்ச்சி திட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும், ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் இந்திய பொறியாளர்கள் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு தேவையான பெரிய அளவிலான அணுக்கரு கருவிகளை உருவாக்கி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பின்தங்கிய மாவட்டங்களாக குறிப்பிடப்படும் தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் சிறப்பாக செயல்படுவதாக அவர் கூறினார். உதாரணமாக, விருதுநகரில் சிட்பி வங்கி ஒரு பிரிவைத் தொடங்கி, அங்கு மிளகாய் வற்றல் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.