புதுக்கோட்டை: கீரனூர் பகுதியில் கண்ணங்குடி கிராமத்தில் தொடங்கப்பட உள்ள புதிய கல்குவாரிக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியை சேர்ந்த நேதாஜி என்பவருக்கு சொந்தமான சுமார் 715 ஏக்கர் நிலத்தில் அரசு அனுமதி பெற்று கல்குவாரி பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கல்குவாரி அமைய உள்ள இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள குளவாய்பட்டி கிராமத்தில் 300 குடும்பங்கள் வசிப்பதாகவும், கல்குவாரி தொடங்கினால் மாசு ஏற்பட்டு விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அமைச்சர் பிரபுவின் வீட்டை மக்கள் முற்றுகையிடப் போவதாக சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவின. இதையடுத்து சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் அமைச்சர் பிரபு கண்ணங்குடியில் கல்குவாரி அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டார். அங்கு வந்த பெண்கள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கூறி, அமைச்சர் கால்களில் விழுந்து கதறி அழுதனர். அமைச்சர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.




