சென்னை: அரசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட த.வெ.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலர் ஞானசவுந்தரியை கட்சி நீக்கியுள்ளது.
அரசு வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம் கேட்கப்படுவதாக அவர் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் தான் விண்ணப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் ஆனந்த் பரிந்துரையின் அடிப்படையிலேயே நியமனங்கள் நடக்கின்றன என்றும், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில், த.வெ.க. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலர் மோகன்ராஜ், ஞானசவுந்தரியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.




