இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நீடிக்கும் வன்முறை மற்றும் பதற்றமான சூழல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் முதல் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டசபையில் அகதிகளுக்கான இடஒதுக்கீடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்கள் இதற்கு பின்னணியாக கூறப்படுகின்றன. இந்த கலவர சூழலில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வரும் 27ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் போல்கர் டர்க் வெளியிட்ட அறிக்கையில், அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
வன்முறை சம்பவங்களில் உயிரிழந்த ஒவ்வொருவரின் மரணத்தையும் பாரபட்சமின்றி, உடனடியாகவும் முழுமையாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பதற்றத்தை கட்டுப்படுத்த இணைய சேவைகள் முடக்கப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.





