சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் முதல்வர் விஜய் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு நடத்தியதையடுத்து, உணவு வழங்கல் மற்றும் விடுதி விதிமுறைகளில் உடனடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் நலத் துறைக்கு உட்பட்ட இந்த விடுதி ரூ.44.50 கோடி செலவில் கட்டப்பட்டதாகவும், அடிப்படை வசதிகள் குறைவு மற்றும் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் மாணவர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆய்வின்போது, உணவில் புழு, பூச்சி இருப்பதாகவும், உணவு தரமின்றி வழங்கப்படுவதாகவும் மாணவர்கள் முதல்வரிடம் தெரிவித்தனர்.

மேலும், இரவு வேலை அல்லது அரசு போட்டித் தேர்வு தயாரிப்பின் காரணமாக தாமதமாக வரும் மாணவர்களுக்கு உணவு மறுக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு விடுதிக்குள் அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் முதல்வர் விளக்கம் கேட்டதுடன், புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் தற்போது மீண்டும் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் நள்ளிரவு 12 மணி வரை விடுதிக்குள் அனுமதிக்கப்படும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன், விடுதி நூலகத்திற்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.