புதுடில்லியில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (சிஜேபி) இயக்கத்தினர் பார்லி நோக்கி பேரணி செல்ல முயன்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தகவலின்படி, ஜந்தர் மந்தரில் 21 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து பார்லியை முற்றுகையிடும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் எந்தப் பேரணிக்கும் அனுமதி இல்லை என்றும், டில்லியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நிலையில், முன்னெச்சரிக்கையாக போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதுடன் சிலரை கைது செய்தனர். மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் நேரத்தில் பார்லி நோக்கி முன்னேற முயன்றதால் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்; பார்லி நுழைவு வாயில்கள் மூடப்பட்டன; மேலும் 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. இந்த போராட்டத்தில் சில போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்தி கூறுகிறது.





