தமிழகத்தில் ரூ.3,250 கோடி முதலீட்டுடன் போர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளதாக, இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைகளில் தெரிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள போர்டு வளாகம் சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட நிலையில், அதை மீண்டும் செயல்படுத்த நிறுவனம் முன்வந்துள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு இன்ஜின் உற்பத்தி மையம் தொடங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை, போர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்து பேசினர். உற்பத்தி மீள்தொடக்கம் மற்றும் எதிர்கால உற்பத்தித் துறை விரிவாக்கத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

சந்திப்பின்போது, விரைவில் தொடங்க உள்ள உற்பத்தித் திட்டத்திற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என முதல்வர் விஜய் உறுதியளித்தார். மேலும், தொழிற்சாலையை முழு அளவில் பயன்படுத்தும் வகையில் உற்பத்தி மற்றும் விரிவாக்கத் திட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.