ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ‘கியூடெங்கா’ (QDENGA) என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டில் டெங்குவுக்கு அங்கீகாரம் பெறும் முதல் தடுப்பூசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொசுக்களால் பரவும் டெங்கு நோய் சுகாதாரத் துறைக்கு தொடர்ந்து சவாலாக இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்தாலும் ஆண்டுதோறும் பாதிப்பும் உயிரிழப்பும் பதிவாகி வந்த நிலையில், இதுவரை இந்தியாவில் டெங்கு தடுப்பூசி அங்கீகாரம் பெறவில்லை.
இந்நிலையில், ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட தகேடா நிறுவனம் தயாரித்த ‘கியூடெங்கா’ தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DCGI) அனுமதி அளித்துள்ளது. 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு இதை செலுத்தலாம்; முன்பு டெங்கு ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் முன் பரிசோதனை இன்றி பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட திட்டப்படி, 0.5 மில்லி லிட்டர் அளவில் தோல் வழியாக இரண்டு டோஸ்களாக செலுத்தப்படும்; இரு டோஸ்களுக்கும் இடையில் மூன்று மாத இடைவெளி இருக்கும்.
மேலும், உலக சுகாதார அமைப்பின் (WHO) தரம், பாதுகாப்பு, செயல்திறன் சோதனைகளில் இந்த தடுப்பூசி வெற்றி பெற்றதாகவும், WHO இதை பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் 43 நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், உலகளவில் 3.2 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அர்ஜென்டினா, கொலம்பியா, இந்தோனேஷியா, பிரேசில் போன்ற நாடுகளின் தேசிய தடுப்பூசி திட்டங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.





