மதுரை மாவட்டம் மாங்குளத்தில் உள்ள சமணர் படுக்கைகளை பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் மற்றும் பாறை படுக்கை அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார்.
அங்கு சமண மதத்தைப் பரப்ப வந்தவர்கள் தங்கி தியானம் செய்து ஓய்வெடுத்ததாக அதிகாரிகள் விளக்கினர். இதை கேட்ட அமைச்சர், பாறை படுக்கையில் கால்நீட்டி படுத்துப் பார்த்து அதன் அமைப்பை நேரடியாக அறிந்து ஆய்வு செய்தார்.
பின்னர், மாங்குளம் சமணர் படுக்கைகளை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொல்லியல் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். சங்க காலப் பாண்டிய மன்னர்களின் வரலாற்றை வெளிப்படுத்தும் மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் “வரலாற்றுப் பொக்கிஷம்” எனவும் அவர் கூறினார்.
சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வழிகாட்டிப் பலகைகளை டிஜிட்டல் முறையில் அமைக்கவும் தொல்லியல் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கீழடி அகழாய்வு தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக நாகரிகத்திற்கும் முக்கியமானது என்றும், கூடுதல் அறிவியல் ஆதாரங்களுடன் மத்திய அரசுடன் ஆலோசித்து முறையான வழியில் நிரூபிக்கப்படும் என்றும், சரியான நேரத்தில் துல்லிய ஆதாரங்களுடன் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன், இணை இயக்குநர் பயதீஸ் குமார், கலெக்டர் நிஷாந்த் குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.





