புதுடில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாகவும் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் நடைபெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கூட்டத்தொடர் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, இது இளைஞர்களின் காலம் என குறிப்பிட்டார். விக்ரம்-1 திட்ட வெற்றியை எடுத்துக்காட்டி, அந்தச் சாதனையை நிகழ்த்திய குழுவின் சராசரி வயது சுமார் 28 என கூறப்பட்டதாகவும், 56 வயதில் தங்களை ‘இளைஞர்’ என சொல்லிக் கொள்பவர்களுக்கான காலம் அல்ல என்றும் தெரிவித்தார்.

விக்ரம்-1 வெற்றி வரலாற்றுச் சாதனை என்றும், இது இந்தியர்களுக்கு பெருமை அளிப்பதாகவும் மோடி கூறினார். இளைஞர்கள் உருவாக்கிய ஸ்டார்ட்-அப்கள் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருவதாகவும், விண்வெளித் துறையில் இந்தியா புதிய மைல்கற்களை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல துறைகளிலும் இந்தியர்கள் சாதனை படைத்து வருவதாக கூறிய அவர், உலகிலேயே சக்திவாய்ந்த ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகம் செய்ததாக தெரிவித்தார். சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நம்பிக்கை உயர்ந்து வருவதாகவும், மேற்காசியப் போரால் ஏற்பட்ட சவால்களை இந்தியா திறம்பட சமாளித்ததாகவும், அது இந்திய வளர்ச்சியைத் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு ஒரு இந்தியக் குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை நினைவுகூர்ந்த மோடி, தனியார் நிறுவனங்களின் விண்வெளி செயல்பாடுகளை மிகச் சில நாடுகளே கண்டுள்ள நிலையில் இது பெரிய வெற்றி என்றும் தெரிவித்தார்.