பொள்ளாச்சியில் ஜான்சன் என்ற காவல் எஸ்ஐ, ஒரு வழக்கு தொடர்பாக முருகேஷ் என்பவரை மிரட்டி ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தாம் சிக்கிக் கொள்ளக் கூடுமென அச்சமடைந்த எஸ்ஐ, பெற்ற பணத்தை திருப்பித் தர முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உத்தரவின்பேரில் ஏட்டு நாகராஜ், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு பணத்தை வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அந்த நபர் பணத்தை பெற மறுத்ததாகவும், இதுதொடர்பான உரையாடல் ஆடியோ இணையத்தில் வைரலானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த ஆடியோவில், ஏட்டு நாகராஜ் மீண்டும் மீண்டும் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்த, அந்த நபர் “லஞ்சமாக கொடுத்ததாகவே இருக்கட்டும்” என கூறுவது பதிவாகியுள்ளது.
ஆடியோ பரவியதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் எஸ்ஐ ஜான்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் ஏட்டு நாகராஜ் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இருவர்மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





