விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளி சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து உலகிற்கான சேவையை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உறுதி அளித்துள்ளது.
நாட்டின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டாக குறிப்பிடப்படும் விக்ரம்-1 வெற்றியால், தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டுகளை சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் பெற்ற உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ஸ்கைரூட் குழுவை பாராட்டினார். ஸ்டார்ட் அப் குழுவின் சராசரி வயது 28 என தன்னிடம் கூறப்பட்டதாகவும், இது இளைஞர்களின் காலத்தை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு நன்றி தெரிவித்து ஸ்கைரூட் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் பிரதமர் தங்கள் குழுவினரை பற்றி பேசியது பெருமை அளிப்பதாக கூறியது. லட்சியமும் வாய்ப்பும் இணைந்தால் இளம் இந்தியப் பொறியாளர்கள் எத்தகைய சாதனைகளை உருவாக்க முடியும் என்பதற்கான சான்றாக இது அமைந்ததாகவும், இந்தியாவிலிருந்து உலகிற்கான சேவை தொடரும் என்றும் நிறுவனம் தெரிவித்தது.





