சென்னை: தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டண மற்றும் பில்லிங் குளறுபடிகளுக்கு தீர்வு காண, தமிழக அரசு சிறப்புத் தணிக்கையை தொடங்க வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் தொடர்பான பிழைகளால் பொதுமக்களுக்கு தவறான கட்டணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறினார்.

மின் கணக்கீட்டில் பெரிய அளவில் குளறுபடிகள் நடந்துள்ளதாக மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், இது நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். இந்தப் பிரச்னையில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், தவறாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மின்வாரியம் உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்றும், நிரந்தரத் தீர்வுக்காக சிறப்புத் தணிக்கையை அரசு தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிரச்னைகள் விரைவில் சீரமைக்கப்படாமல் மக்களின் சுமை குறைக்கப்படாவிட்டால், பாஜ சார்பில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.