சென்னை: இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் சதுரங்க கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழகம் சாதனை படைத்து வருகிறது என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
உலக சதுரங்க நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், சதுரங்கத்தை நேசிக்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார். சர்வதேச அரங்கில் தமிழகத்தின் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சாதனைகள் மூலம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
1988ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக விஸ்வநாதன் ஆனந்த் உருவானதை நினைவுகூர்ந்த முதல்வர், குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட இளம் கிராண்ட் மாஸ்டர்கள் உலகளாவிய போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் பெயரை உயர்த்தி வருவதாக கூறி, அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழகம் முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களை கற்றுத் தேர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். இத்தகைய முயற்சிகளுக்கு அரசு அனைத்து வகையிலும் துணை நின்று தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.





