கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான ஆன்டி பர்ன்ஹாம், பிரிட்டனின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சிக்குள் ஏற்பட்ட திடீர் தலைமாற்றத்தின் பின்னணியில் இந்த மாற்றம் நடந்துள்ளது.
கடந்த மே மாத உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தீவிரமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நடந்த பார்லி இடைத்தேர்தலில் போட்டியிட்ட கட்சியின் மூத்த தலைவர் பர்ன்ஹாம், மிகப் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன் பின்னர் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மருக்கு எதிரான குரல்கள் வலுத்தன. பர்ன்ஹாம் தலைமையை ஏற்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், ஸ்டார்மர் கட்சி தலைவர் பதவியும் பிரதமர் பதவியும் விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து நடந்த கட்சி கூட்டத்தில் பர்ன்ஹாம் போட்டியின்றி தொழிலாளர் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் 403 எம்.பி.களில் 379 பேரின் ஆதரவை பெற்ற அவர் புதிய தலைவராகவும் பிரதமராகவும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். ஸ்டார்மர் மன்னர் சார்லசை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியதையடுத்து, புதிய அரசு அமைக்க பர்ன்ஹாமுக்கு மன்னர் அழைப்பு விடுத்தார்; அதை ஏற்றுக் கொண்ட பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்னர் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு சென்று அங்கு திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றினார்.
2016க்கு பின் கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனின் 7வது பிரதமராக பர்ன்ஹாம் பதவியேற்றுள்ளார். அவர் கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயர்; ‘வடக்கு மன்னர்’ என்ற பெயராலும் அறியப்படுகிறார்.





