சென்னை மாநகராட்சி 2026–27 பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்த 90 திட்டங்களின் செலவுக் கணிப்புகளை மீளாய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சில பணிகளுக்கு தேவையை விட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட 2026–27 பட்ஜெட்டில், மொத்த வரவு ரூ.7,717 கோடி, மொத்த செலவு ரூ.9,319 கோடி என கணக்கிடப்பட்டு, ரூ.1,602 கோடி நிதி பற்றாக்குறை ஏற்படும் என குறிப்பிடப்பட்டது. மேலும் உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்டவற்றின் மூலம் இதுவரை ரூ.2,000 கோடி கடன் பெற்றுள்ளதுடன், ஆண்டுக்கு ரூ.95.20 கோடி வட்டியாக செலுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மூலதன நிதி அளவுக்கு அதிகமாக செலவிடப்பட்டதாகவும், இதனால் மாநகராட்சி நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்; ஆனால் ஒதுக்கப்படும் தொகை மட்டும் மீளாய்வு செய்து இறுதி செய்யப்படும் என அவர்கள் விளக்கினர்.
உதாரணமாக, ரூ.300 கோடியில் கட்ட முடியும் என கூறப்படும் ஒரு மேம்பாலத்துக்கு ரூ.375 கோடி ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக ரூ.800 கோடிக்கு மேற்பட்ட ஒப்பந்தப் பணிகள் ரத்து செய்யப்பட்டு மறுமதிப்பீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மேயர் அறிவிப்பில் 100 பள்ளிகளுக்கு ரூ.60 லட்சத்தில் ‘பிரின்டர்’ வாங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், பின்னர் ரூ.22.12 லட்சத்தில் 100 பிரின்டர்கள் வாங்கி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், சுமார் ரூ.38 லட்சம் மிச்சம் ஏற்பட்டதாகவும் கூறினர். இதுபோன்று பல திட்டங்களில் மதிப்பீடு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால், செலவினத்தை குறைத்து நிதி பற்றாக்குறையையும் குறைக்கும் வகையில் மதிப்பீடுகள் மீளாய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





