சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் விஜயின் அலுவலகத்தை இடமாற்றுவது தொடர்பாக ஆரம்ப கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டை பாரம்பரிய கட்டடத்தில் இயங்கும் முதல்வர் அலுவலகத்தை, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவது குறித்து பேசப்படுவதாக கூறப்படுகிறது.
கோட்டை கட்டடத்தில் முதல்வர் அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகங்கள், சட்டசபை அரங்கு, தலைமைச் செயலர் அலுவலகம், பல துறை செயலர் அலுவலகங்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இதே வளாகத்தில் உள்ள 10 மாடி நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல துறைகளின் செயலர்கள் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
முதல்வரை சந்திக்க தினமும் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் வருவதுடன், கூட்டணி கட்சித் தலைவர்களும் அவ்வப்போது வருகை தருகின்றனர். இதனால் தற்போதைய முதல்வர் அலுவலகத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு, வருகையாளர்கள் சிரமம் அடைவதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தை முழுமையாக முதல்வர் அலுவலகமாக மாற்றும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல். அங்கு தற்போது உள்ள கருத்தரங்க கூடம் மற்றும் உணவருந்தும் கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இடநெருக்கடி காரணம் என கூறப்பட்டாலும், வாஸ்து தொடர்பான ஆலோசனையால் உயரமான கட்டடத்தில் அலுவலகம் இயங்க வேண்டும் என ஜோதிடர் அறிவுறுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர். எனினும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.




