சென்னை உள்ளிட்ட பகுதிகளில், இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மின் மீட்டர் கணக்கெடுப்பில் தாமதம் ஏற்படுவதால், நுகர்வோருக்கு வழக்கத்தை விட அதிக மின் கட்டணம் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளும் கூட அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பின்னர், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது மே 10 முதல் அமலுக்கு வந்தது. ஜூலை 10க்கு இரு மாதங்கள் நிறைவடைவதால், அந்த நாளிலிருந்து கணக்கெடுக்கும் வீடுகளில் 200 யூனிட் இலவச மின்சாரம் முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் சில இடங்களில் பணியாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கணக்கெடுப்புக்கு செல்லாததால், கணக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டு இலவச யூனிட் சலுகை சரியாக பிரதிபலிக்காமல், அதிக பயன்பாடு பதிவாகி அதிக கட்டணம் விதிக்கப்படுவதாக நுகர்வோர் கூறுகின்றனர். இதனுடன் பழுதான மீட்டர்களும் பாதிப்பை அதிகரிக்கின்றன; புகார்கள் உயரதிகாரிகளிடம் சென்றும் உரிய நடவடிக்கை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், சில பிரிவுகளில் தொடர்ந்து நடைபெறும் “அசாதாரண பில்லிங்” முறைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீட்டர், மீட்டர் கணக்கு அல்லது செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளால் வீட்டு நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பிரிவிலும் காலமுறைப்படி திடீர் ஆய்வுகள் நடத்தி, மதிப்பீடுகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க பணியாளர்களை அறிவுறுத்த வேண்டும் என்றும், அலட்சியம் காட்டும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தேவையெனில் ஒழுங்கு நடவடிக்கை உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.