மதுரை: தமிழகத்தில் மாநில ‘நல்லாசிரியர்’ விருதுக்கான தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் இறுதி பட்டியலில் கடைசி நேரத்தில் அரசியல் மற்றும் அதிகாரிகள் சிபாரிசு அடிப்படையில் மாற்றங்கள் நடந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனால் சில ஆண்டுகளாக விண்ணப்பிக்கும் ஆர்வம் குறைந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு தற்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. மாவட்ட அளவில் தலைமை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன முதல்வர், சீனியர் வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நடப்பு நடைமுறையின்படி, மாவட்டத் தேர்வுக் குழு நேர்காணல் நடத்தி 1:2 என்ற விகிதத்தில் தகுதி பட்டியலைத் தயாரிக்கிறது. அரசு உதவிபெறும் தொடக்க, நடு, உயர், மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் விதிகளுக்கு உட்பட்டு பிரதிநிதித்துவம் வழங்கி, விருது எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால் மாநிலத் தேர்வுக் குழு கட்டத்தில் இறுதி பட்டியலில் மாற்றம் செய்ய வாய்ப்பு உருவாகிறது என்றும், சில மாவட்டங்களில் மாவட்ட பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கும் விருது கிடைத்ததாகவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்டத் தேர்வுக் குழு பட்டியலில் உள்ளவர்களையே பரிந்துரைக்க வேண்டும் என்ற நடைமுறையை அரசு வெளிப்படையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக நேர்காணல் முடிவில் தயாராகும் இறுதி பட்டியலை அந்தந்த சி.இ.ஓ. அலுவலக நோட்டீஸ் போர்டில் ஒட்டிவைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.





