பாலியல் தொந்தரவு போன்ற சம்பவங்களில் குழந்தைகள் சந்திக்கும் கடுமையான மனஅழுத்தத்தை சமூகத்தில் பலர் புரிந்து கொள்ளவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் மீது செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி ஏற்கனவே சாட்சியம் அளித்த நிலையில், அவரை மீண்டும் ஆஜர்படுத்தி குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, கீழ்நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்தி மனுவை நிராகரித்தார். போக்சோ சட்டம் குழந்தைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகவும், அதை அமல்படுத்தும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் மனவேதனைக்கு ஆளாகாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து நடந்ததை சொல்ல வற்புறுத்த முடியாது; “நியாயமான விசாரணை” என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.





