புதுடில்லி: நாடு முழுவதும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜப்பானைச் சேர்ந்த டகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் தயாரிக்கும் ‘கியூடெங்கா’ டெங்கு தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த மத்திய அரசு முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது. 4 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில் டெங்கு பரவல் நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் ஏற்படும் சவாலாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் டெங்கு பாதிப்பு 11 மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. மேலும், டெங்குவின் நான்கு வகை வைரஸ்களும் ஒரே நேரத்தில் பரவி வருவதால், நோய் எதிர்ப்பு திறன் குறைவானவர்களுக்கு ஆபத்து அதிகரிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்த தடுப்பூசியை 43 நாடுகள் பயன்படுத்தி வருகின்றன; இதுவரை 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய சந்தைப்படுத்தல் அனுமதிக்கு முன், 28,000 பேரை உள்ளடக்கிய 19 கட்ட மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கூறுகிறது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன; பாதுகாப்பு தன்மை மற்றும் நோய் எதிர்ப்பு திறன் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்குவின் நான்கு வகை வைரஸ் தொற்றுகளுக்கும் எதிராக ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும் பாதுகாப்பை வழங்கக்கூடும் என ஆய்வில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு தரம் மற்றும் பாதுகாப்பை அங்கீகரித்து, பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பயன்படுத்தலாம் என பரிந்துரைத்த பின்னணியில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. டகேடா நிறுவனம், இந்தியாவின் ‘பயாலஜிக்கல் இ’ நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு 5 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது; கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுடன் இணைந்து இது பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.