வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், டில்லியில் உள்ள ரஷ்ய தூதரை நேரில் அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது.
தகவலின்படி, உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.வி. கோல்டன் லியோ கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. சம்பவ நேரத்தில் கப்பலில் 17 பணியாளர்கள் இருந்ததாகவும், அதில் 5 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.
இதில் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனத்தை வெளியிட்டது.
வர்த்தகக் கப்பல்களை குறிவைப்பதும், அப்பாவி கப்பல் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும், கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகச் சுதந்திரத்தை பாதிப்பதும் கண்டிக்கத்தக்கது; இவை தவிர்க்கப்பட வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியது. ரஷ்யா–உக்ரைன் மோதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த முதல் சம்பவம் இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீப வாரங்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடந்த தாக்குதல்களில் ஆறுக்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்காவிடம் இந்தியா ஏற்கனவே கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





