போபாலில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட (UCC) மசோதா நிறைவேற்றப்பட்டதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.
மசோதாவின் முக்கிய அம்சமாக, திருமணமான தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள் மற்றும் வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் சமமான சட்ட உரிமை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், பலதார மணத்துக்கு தடை விதிப்பதுடன், முஸ்லிம்களின் மூன்று முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து வழங்கும் ‘முத்தலாக்’ நடைமுறையை குற்றமாகக் கருதும் வகையிலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணம் செய்யாமல் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் அதை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யாவிட்டால், மூன்று மாதம் சிறை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கலாம் என்றும் மசோதா பரிந்துரைக்கிறது.
ஏற்கனவே உத்தராகண்ட், குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் இதேபோன்ற பொது சிவில் சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





