மேற்காசியாவில் போர்ச்சூழல் நிலவிய நிலையிலும் இந்தியா 7.7 சதவீத வளர்ச்சி விகிதத்தை தக்கவைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தெரிவித்தார். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதை கூறினார்.

தேசிய, சர்வதேச அளவில் இந்தியாவின் சாதனைகள் தொடர்வதாகவும், அதில் சமீபத்திய விண்வெளித் துறை முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகவும் பிரதமர் கூறினார். முன்பு ஒரே ஒரு இந்தியக் குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த நிலையில், இப்போது ஒரு இளம் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் விண்வெளிப் பயணத்தில் முக்கிய சாதனை படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய துணிச்சலான தனியார் முயற்சிகள் உலகில் மிகச் சில நாடுகளில் மட்டுமே காணப்படுவதாகவும், இந்திய இளைஞர்கள் தங்களின் திறமையால் விண்வெளியில் புதிய பயணங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சராசரியாக 28 வயதுடைய இளைஞர்கள் கொண்ட அந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் விண்வெளியில் இந்தியக் கொடியை ஏற்றியதாக கூறி, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த சாதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் விளைவாக சாத்தியமானதாகவும் அவர் கூறினார். மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக எரிசக்தி உள்ளிட்ட பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி., உரங்கள், ரசாயனங்கள் போன்றவற்றில் பிற நாடுகளை சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதையெல்லாம் எதிர்கொண்டபோதும் இந்தியா வளர்ச்சியைத் தொடர்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் வேளையில் நாடு புதிய உத்வேகம் பெற்றுள்ளதாக கருதுவதாக கூறிய பிரதமர், பார்லிமென்ட் சிறப்பாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். உண்மைகள் மற்றும் வாதங்கள் தெளிவாக முன்வைக்கப்படும் போது கூச்சல், அமளி தேவையில்லை என்றும், விவாதங்கள் உண்மைகளால் செழுமைப்பட வேண்டும்; ஒவ்வொரு குரலுக்கும் வாய்ப்பளித்து கருத்துகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.