சென்னையில் திருவல்லிக்கேணி போலீசார் மேற்கொண்ட தொடர் கைது நடவடிக்கைகளுக்குப் பிறகு, கள்ள நோட்டு கும்பலின் சர்வதேச தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை தொடங்கியுள்ளது.

திருவல்லிக்கேணியில் ஷபீர் ரஹ்மான் மற்றும் மலேஷியாவை சேர்ந்த புவனேஸ்வரி கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் 15 பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட்களை ஆய்வு செய்ததில், அவர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தது தெரியவந்ததாக போலீசார் கூறினர். கும்பலின் தலைவியாக புவனேஸ்வரி செயல்பட்டதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் கள்ள நோட்டுகளை ‘டிபாசிட்’ செய்ய திட்டமிட்டிருந்ததாக புவனேஸ்வரி கூறியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மலேஷியாவிலிருந்து கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளை தாம் மற்றும் ஷபீர் ரஹ்மான் கடத்தி வந்ததாகவும், ரவிச்சந்திரன் தனது கூட்டாளிகள் மூலம் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான மூவருக்கும் சர்வதேச அளவில் தொடர்புகள் உள்ளதாகவும், பின்னணியில் பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்ஐஏ விசாரணையைத் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.