இந்தியா சூப்பர் பவர் நாடாக உருவாகி வருவதாக பனாமா நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜேவியர் எடுரோ தெரிவித்தார். ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார்.

புதுடில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இன்றைய உலகச் சூழல் 80 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை பிரதிபலிப்பதில்லை என்று அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக உள்ள இந்தியாவின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி, தற்போதைய நிஜங்களை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச அமைப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.

ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் அவசியம் என வலியுறுத்திய அவர், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க பனாமா உறுதியாக ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். அதேபோல் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்துக்கும் நிரந்தர பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவ்வாறு பிரதிநிதித்துவம் விரிவடைவதன் மூலம் பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து மேலும் ஆக்கப்பூர்வமாகவும் சமநிலையுடனும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று ஜேவியர் எடுரோ தெரிவித்தார்.