சென்னையில் கட்டுமான திட்டங்களுக்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) மற்றும் நகர் ஊரமைப்பு துறை (டி.டி.சி.பி.) மூலம் அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் போது, சதுரடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. கோப்புகள் அதிகாரிகளிடம் இருந்தாலும், அதிலுள்ள விவரங்களைப் பெற்ற அரசியல் தொடர்புடையவர்கள் கட்டுமான நிறுவனங்களை அணுகி நிதி கேட்பதும், ஒத்துக்கொள்ளாத நிறுவனங்களுக்கு அனுமதி தாமதப்படுத்தப்படுவதும் நடந்ததாக துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த செலவை கட்டுமான நிறுவனங்கள் வீட்டு விலையில் சேர்த்து மக்களிடமிருந்து வசூலித்ததால், வீடுகளின் விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கட்டட அனுமதி வழங்க ‘கட்சி நிதி’ வசூலிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த முடிவை கிரெடாய் (CREDAI) மற்றும் இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் வரவேற்றுள்ளன. ‘கட்சி நிதி’ வசூல் நிறுத்தப்பட்டதால் கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி, புதியதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில் சதுரடிக்கு ரூ.100 வரை விலை குறைக்க வாய்ப்பு உள்ளது என கட்டுமானத் துறையினர் கூறினர்.




