சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மனிதர்களின் வேலைகளை ஒருபோதும் பறிக்காது என்றும், அதைக் கண்டு அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார். இந்திய திறமைகளின் உலகளாவிய பங்களிப்பை சுட்டிக்காட்டும் வகையில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை குறிப்பிட்டும் அவர் பேசினார்.

“இந்த நொடி முதல் தமிழகத்தின் கல்வி மாறுகிறது” என கூறிய அவர், கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவதே நோக்கம் என்றார். புத்தகப்பை சுமை குறைந்தால் மாணவர்களின் மனச்சுமையும் குறையும் என்றும், பாடப்புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கேற்ற கல்வி முறையாக பாடத்திட்டம் மாற்றப்படும் என்றும், கதைகளின் வழியே கணிதம் கற்பிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், ‘ப்ராம்ப்ட் இன்ஜினியரிங்’ பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும், ஏஐ யாருடைய வேலையையும் பறிக்காது என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

அறிவியல் சார்ந்த நடைமுறை கற்றலை ஊக்குவிக்கும் வகையில், இஸ்ரோவின் உதவியுடன் பள்ளி மாணவர்கள் சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கும் குட்டி செயற்கைக்கோள்களை வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் வகையிலான கல்வித் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.