அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைப் பற்றிய விசாரணையை, எஸ்.ஐ.டி. (சிறப்பு புலனாய்வு குழு) தலைமையில் ஒப்படைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம், நிதி முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து உருவானது. மாநில அரசு அமைத்த மூன்று பேர் கொண்ட எஸ்.ஐ.டி., முறைகேடுகள் நடந்ததை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், ராமர் கோவில் அறக்கட்டளையின் ஒட்டுமொத்த நிதி வரவு–செலவுகளை மத்திய தணிக்கை அமைப்பு அல்லது தடயவியல் தணிக்கை மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. சுதாகர் சிங் உள்ளிட்டோரும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) விசாரணைக்கு வந்தபோது, விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என நீதிமன்றம் எச்சரித்தது. நீதிமன்றங்கள் அரசியல் செய்யும் இடமல்ல; நேர்மையான, முறையான குற்றவியல் விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதே நோக்கம் எனவும் தெரிவித்தது.

உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதுவரை நடந்த விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்தார். விசாரணையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, முதன்மை விசாரணையை எஸ்.ஐ.டி.யிடமே ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை மாநில அரசு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஜூலை 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.