ஆர்க்டிக் பெருங்கடலில் வெப்பம் வேகமாக உயர்வதற்கான காரணங்களை அறிய, ‘தாரா போலார் ஸ்டேஷன்’ என்ற அதிநவீன மிதக்கும் அறிவியல் ஆய்வகம் பிரான்சின் லாரியண்ட் துறைமுகத்திலிருந்து பயணத்தை தொடங்கியுள்ளது.
உறைபனி மற்றும் பனிப்பாறைகள் நிறைந்த ஆர்க்டிக் பகுதி, தற்போது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தில் சிக்கி, பூமியின் பல பகுதிகளை விட மூன்று முதல் நான்கு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக செய்தி கூறுகிறது. இந்த வேகமான வெப்பமாதலுக்குப் பின்னுள்ள காரணிகளை கண்டறிவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம்.
முழுக்க அலுமினியத்தால் கட்டப்பட்ட இந்த மையம், கடல் பனியின் கடுமையான அழுத்தத்தையும் -52°C வரை குறையும் கடும் குளிரையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வடதுருவப் பகுதியில் 350 முதல் 500 நாட்கள் வரை மிதந்தபடியே தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
ஆய்வகத்தின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு செங்குத்து கிணற்றின் மூலம், கடல் பனிக்குக் கீழே 6,000 அடி ஆழம் வரை கருவிகளை அனுப்பி 10,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பயணத்தில் 6 விஞ்ஞானிகள் உட்பட 12 பேர் உள்ளனர்; இவர்கள் 5 மாதங்கள் சூரியஒளியே இல்லாத துருவ இரவை எதிர்கொள்ளவுள்ளனர்.
பிரான்ஸ் நிதியுதவியுடன் நடைபெறும் இந்தத் திட்டத்தில், ஜெர்மனி, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 40 அறிவியல் கூட்டமைப்புகள் மற்றும் 30 ஆராய்ச்சி மையங்கள் இணைந்துள்ளன. துருவக் கரடிகள் அருகில் வருவதை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்க ‘லாப்போனியன் ஹெர்டர்’ ரக நாயும் குழுவுடன் சென்றுள்ளது.





