பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில், ஒருங்கிணைப்புக்கான நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைப்பில் இணைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்ணாமலை போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு உத்தரவிட்டதாக அவர்கள் கூறினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் பல இடங்களில் ஒன்றுகூடி மாரத்தான், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் கவனத்திற்கு போதுமான அளவில் செல்லவில்லை என தெரிவித்தனர்.

உறுப்பினர் சேர்க்கையில் 5 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், அவர் அழைப்பு விடுத்த ஜூன் 5 அன்று ஒரே நாளில் 12 லட்சம் பேர் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் சேர்க்கை குறைந்ததாகவும், நகரங்களில் அண்ணாமலையை அறிந்தவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே இணைந்துவிட்டதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கிராமப்புறங்களில் சேர்க்கையை விரிவுபடுத்த கீழ்மட்ட நிர்வாகிகள் இல்லாததே முக்கிய தடையாக இருப்பதாக அவர்கள் கூறினர். மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம் ஆகிய நிலைகளில் நிர்வாகிகளை நியமித்தால் உறுப்பினர் சேர்க்கையும் நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு நடைபெறும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் கட்சி தொடங்குவதில் காலதாமதம் ஏற்படலாம் என்ற எண்ணமும், அண்ணாமலை ‘அதிரடி அரசியல்’ செய்யாமல் ‘நாகரிக அரசியல்’ செய்வதாக உள்ள பார்வையும் சிலரிடம் சோர்வை உருவாக்கியுள்ளதாக கூறினர். இதை போக்க நிர்வாகிகளை நியமித்து, தெளிவான மற்றும் தீர்மானமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.