சென்னை: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 615 தொல்பொருட்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கடத்தல் கும்பல்கள் இடைத்தரகர்கள் மூலம் நாட்டின் பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் அரிய தொல்பொருட்களை திருடி, பல கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளில் விற்றதாக கூறப்படுகிறது. 1980 முதல் 2000 வரை கடத்தப்பட்ட கலைப்பொருட்களில் தமிழகத்தைச் சேர்ந்தவை அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வரலாறு, கலை, பண்பாட்டு முக்கியத்துவம் காரணமாக பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ள பிரபல கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருள்களாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மீட்க வேண்டும் என ஆர்வலர்களும் மாநில அரசுகளும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் மத்திய அரசு மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமிழகத்துடன் தொடர்புடைய சோழர் கால வெண்கல, கல் சிலைகள் மற்றும் பழமையான நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை, நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆண்டு வாரியாக 2021ல் 159, 2022ல் 30, 2023ல் 115, 2024ல் 298 மற்றும் 2026ல் இதுவரை 13 என மொத்தம் 615 தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.





