மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் விஜய் தெரிவித்தார். நீட் தேர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதை அவர் கடுமையாகக் கண்டித்தார். இது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும், மத்திய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்றும் கூறினார்.

நேற்று நடந்ததாகக் கூறப்படும் விரும்பத்தகாத சம்பவத்திற்கு எதிராக, இன்று பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு குறித்து, அந்தத் தேர்வுமுறை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்பதே தவெகவின் சமரசமற்ற நிலைப்பாடு என விஜய் கூறினார். இது மாணவர்களை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களையும் பாதிப்பதாகவும், வாக்கு அரசியலுக்காக பொய்யான வாக்குறுதிகளை தங்கள் கட்சி அளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீட் போன்ற தேர்வுகள் ஒழிக்கப்பட வேண்டுமெனில் முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; அதுவே நிரந்தரத் தீர்வு என அவர் கூறினார். சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், இடைக்காலமாக “Special Concurrent List” உருவாக்கி மாநிலங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட துறைகளில் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், மக்களும் மாணவர்களும் கொண்ட உணர்வுகளுக்கு மரியாதையாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.