பொள்ளாச்சி–கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான மற்றும் அஜாக்கிரதையான முறையில் கார் ஓட்டியதாகக் கூறி கோவை போலீசார் 4 வாலிபர்களை கைது செய்துள்ளனர்.
கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே வேகமாக சென்ற காரின் மேற்பகுதியில் மூன்று பேர் அமர்ந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் செயல் அவர்களது உயிருக்கும் ஆபத்தாக இருந்ததுடன், சாலையில் சென்ற பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
மாவட்ட எஸ்பி பவன் ரெட்டி உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோவை பீளமேட்டை சேர்ந்த சரவணகுமார் (24), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சென்றாய பெருமாள் (24), பாரதி நகரை சேர்ந்த நிர்மல்குமார் (24), மதுரையைச் சேர்ந்த ராகுல்குமார் (19) என போலீசார் தெரிவித்தனர். 211/2026 என்ற குற்ற எண் கீழ் BNS பிரிவுகள் 281, 125, 292 மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் 184 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் பயணித்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.





