சென்னை: காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணிக்காலத்தை நீட்டித்து, நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று “வீ தி லீடர்ஸ்” அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் திட்டத்தின் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளைச் சேர்ந்த பணியாளர்களின் பணிக்காலம் 2025 டிசம்பர் 31-இல் முடிவடைந்ததாக குறிப்பிட்டார். 2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க 2026 மார்ச் 20-ஆம் தேதி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், பணிக்கால நீட்டிப்புக்கான அரசாணை இதுவரை வெளியிடப்படாததால், தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக 2026 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊதியம் மற்றும் தொடர்புடைய செலவுகளுக்காக ரூ.66.52 லட்சம் நிதியை விடுவிக்க 2026 மே 12-ஆம் தேதி கோரிக்கை வைக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை எனவும் தெரிவித்தார்.

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அண்ணாமலை, குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு தாமதமின்றி 2027 டிசம்பர் 31 வரை பணிக்காலத்தை நீட்டித்து அரசாணை வெளியிடவும், ஏப்ரல்–ஜூன் மாதங்களுக்கான நிலுவை ஊதிய நிதியையும் உடனடியாக விடுவிக்கவும் கேட்டுக்கொண்டார்.