முதல்வர் விஜயை மிரட்டும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்ற காவலில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில், விளாத்திக்குளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியதாக கூறப்படும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த உரையில் அவர் முதல்வர் விஜயை குறித்து பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிர்வாகிகள் போலீஸ் நிலையங்களிலும் மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஜூலை 20 அன்று அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
பின்னர் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார். அதே நேரத்தில் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தனி மனுவும் தாக்கல் செய்தனர். இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி சுமதி, எம்எல்ஏவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், காவல் விசாரணை அனுமதி கோரிய போலீஸ் மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டார்.





