காரைக்குடி நகரின் மையப்பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுவதால் பொதுமக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
இந்த நிலம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம்–குறிச்சிபுறவு பகுதியில் உள்ள இலுப்பக்குடி சுயம்பிரகாசேசுவரர் கோவிலுடன் தொடர்புடையது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தார் 9 கோவில்களில் ஒன்றான இக்கோவில், பரம்பரை அறங்காவலர்களால் சுழற்சி முறையில் நிர்வகிக்கப்படுகிறது. காரைக்குடி நகரில் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவில் நிலங்களில் பல இடங்களில் ஆக்ரமிப்பு இருப்பதாகவும், சிலர் தேவஸ்தான அனுமதி பெற்று இடவரி செலுத்தி பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நகரின் மையத்தில் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்த சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் போலி பதிவுகள் மூலம் விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த நிலத்துக்கு காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜேசிபி உதவியுடன் நிலத்தை வாங்கியவர்கள் இடத்தை சுத்தம் செய்ய தொடங்கியபோதுதான் விற்பனை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக தகவல். இதையடுத்து கிராம மக்கள் தாலுகா அலுவலகத்திலும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். இரு தரப்பினரையும் அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா பேச்சுவார்த்தை நடத்தி, கோவில் நிலம் என புகார் இருப்பதால் நீதிமன்ற உத்தரவு பெற்று வந்த பிறகே சுத்தம் செய்யுமாறு வாங்கியவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இதே இடத்துக்கு நான்கு பேர் பத்திர பதிவு செய்து பட்டா பெற்றதாகவும், பின்னர் அது கோவில் நில ஆக்கிரமிப்பு என கண்டறியப்பட்டதால் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு வழக்கும் பதியப்பட்டதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.





