புதுடில்லி: ராஜ்ய சபாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை பார்லிமென்டில் எந்த விவாதத்திலும் காங்கிரஸ் பங்கேற்காது என்று தெரிவித்தார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து, பிரதான் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரிலும் இதே கோரிக்கையை முன்வைத்து அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
அரசு தரப்பில் அமைச்சர் கிரண் ரிஜிஜூ விவாதத்துக்கு தயாராக இருப்பதாக உறுதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், பிரதான் பதவி விலகும் வரை அவையில் எந்த நியாயமான விவாதமோ ஆலோசனையோ அனுமதிக்க மாட்டோம் என்றும், அதுவரை எந்த விவாதத்துக்கும் தயாரில்லை என்றும் கார்கே மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.





