மதுரை: ஓய்வு பெற்ற ஆசிரியையின் ஓய்வூதிய நடவடிக்கைகளில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பாக, லண்டனில் இருந்து முதல்வர் விஜயின் புகார் சேனலுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த சீனித்தாய், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்கான ‘நோ அப்ஜெக்ஷன்’ மற்றும் ‘நோ டியூ’ சான்றுகள் பெற கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) முத்துக்குமார் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக பெற்றதாக அவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லண்டனில் பொறியாளராக பணியாற்றும் அவரது மகன் சதீஷ், முதல்வர் அறிவித்த ‘லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க’ என்ற தமிழக அரசின் வாட்ஸ் அப் எண்ணுக்கு, முதல்வர் தனிப் பிரிவை நோக்கி புகார் அனுப்பியுள்ளார். மாத ஓய்வூதியம் தாமதமின்றி கிடைக்கவும், லஞ்சமாக கொடுத்ததாக கூறும் தொகையை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சீனித்தாய் கூறுகையில், ஓய்வு பெறுவதற்கு முன்பே தலைமையாசிரியர் வாசுதேவன் பேசி தொகையை பெற்றதாகவும், துபாயில் உள்ள மற்றொரு மகன் ரோஹித் ரூ.30 ஆயிரத்தை வாசுதேவனுக்கு அனுப்பியதாகவும், தாம் ரூ.5 ஆயிரத்தை பி.இ.ஓ.,விடம் நேரில் கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், தன் புகார் மீது சரிவர விசாரணை நடக்கவில்லை என்றும் கூறினார்.
இதற்கு பி.இ.ஓ., முத்துக்குமார், திருமங்கலம் தொடக்கக் கல்வி டி.இ.ஓ., விசாரணையில் புகாரில் உண்மை இல்லை என அறிக்கை வந்துள்ளதாகவும், தாம் யாரிடமும் பணம் கேட்கவோ வாங்கவோ இல்லை என்றும் மறுத்தார். இதற்கிடையில், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன் வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி, ஓய்வூதிய கருத்துரு தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதாகவும், புகார் அளித்தவரின் கருத்து கேட்கப்படாமல் விசாரணை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.





