மாருதி சுசூகி நிறுவனம், ஆகஸ்ட் மாதம் முதல் தனது கார் மாடல்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. உலோகங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை உயர்வே இதற்கான காரணம் என நிறுவனம் தெரிவித்தது.
வெளியிட்ட அறிக்கையில், செலவைக் குறைக்க பல மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததாகவும், இருப்பினும் செலவுகள் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
உற்பத்தி செலவுச் சுமையின் கணிசமான பகுதியை தாங்களே ஏற்றுக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைக்க முயன்றதாகவும் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் செலவு உயர்வின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
விலை உயர்வு மாடல்களைப் பொறுத்து மாறுபடும் எனவும், இதை மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த தகவலிலும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் மாருதி சுசூகி பங்குகள் உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.





