புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரத்தை லோக்சபாவில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பார்லி விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை முன்வைத்து பார்லியில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் சூழலில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களாகவே அரசு விவாதத்திற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விவாதம் பார்லிமென்ட் விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறும் என்றும், அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் ஆலோசித்து விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்படும் என்றும் ரிஜிஜூ விளக்கினார்.

இதற்கிடையில், விவாதத்திற்கான அஜெண்டாவை நிர்ணயிக்க எதிர்க்கட்சிகளை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இது அரசியல் நலன்களை விடப் பெரிய விஷயம் என்றும், வெறும் ராஜினாமாவோடு முடிவடையாமல் தவறு செய்தவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கையை மையமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி அவையில் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.