திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலம் தொடர்பான பத்திரப்பதிவு மோசடி வழக்கில், வெள்ளத்துரை தாக்கல் செய்த முன்ஜாமின் மனு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கட்கிழமை ஒத்திவைத்தது.

மடத்திற்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலத்தை சதி செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன், திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளம் வெள்ளத்துரை உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வழக்கில் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியனுக்கு ஏற்கனவே இடைக்கால முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெள்ளத்துரை தனது மனுவில், பத்திரப்பதிவை நிராகரித்த சார்பதிவாளர் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகியதாகவும், அந்த நிராகரிப்பை தனி நீதிபதி ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், நிலம் தொடர்பாக சிவில் வழக்கு நிலுவையில் இல்லை என்றும், பின்னர் இரு நீதிபதிகள் அமர்வு பத்திரப்பதிவை ரத்து செய்ததாகவும் கூறினார். நிலம் வாங்க ரூ.1 கோடி செலுத்தியதால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்து, முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரினார்.

நீதிபதி கே. ராஜசேகர் மனுவை விசாரித்தார். மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட அவகாசம் தேவை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து, வழக்கு விசாரணை ஜூலை 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.