புதுடில்லி: கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை ஒருவருக்கும் தண்டனை கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில தனிநபர்கள் அல்லது சில குழுக்கள் கல்வி அமைப்பை சீரழிக்கின்றன என்றும், இந்தியாவின் மதிப்புமிக்க சொத்தான லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது என்றும் கூறினார்.

வினாத்தாள் கசிவால் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். கல்விக்காக சேமிப்பை செலவழிக்கும் குடும்பங்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர் என்றார்.

கல்விக்காக பட்ஜெட்டில் ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் விமர்சித்தார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் ராகுல் கூறினார்.