மாணவர்கள் அறவழியில், அமைதியாக போராடினால் அரசு ஆதரிக்கும்; ஆனால் சாலைகளை போராட்ட மேடையாக மாற்றக் கூடாது என்று அமைச்சர் ராஜ்மோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நீர் எழில் பள்ளி” திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதை கூறினார். வன்முறையற்ற, ஒழுங்குமுறைப் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உரிய அனுமதி பெற்று நடத்தப்படும் அறவழிப் போராட்டங்களில் பிரச்னை இல்லை; ஆனால் திடீர் தூண்டுதலால் நடத்தப்படும் போராட்டங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்றார். சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போராட்டம் நடந்ததால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
நீட் தேர்வு குறித்து, அதை வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். டெல்லியில் ஜனநாயக முறையில் போராட்டங்கள் நடைபெறுகின்றன; மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.





