தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் புதிய முயற்சியாக ‘ஸ்டீம்’ (STEAM) கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்களின் பாடப்புத்தகச் சுமையும் மனச்சுமையும் குறையும் வகையில் கற்பித்தல் முறை மாற்றப்படும் என்றார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழு கூட்டத்தில் அவர் பேசினார். கணிதப் பாடம் கதைகள் வழியாக கற்பிக்கப்படும் என்றும், ஒவ்வொரு கணித வகுப்பும் கதை சொல்லும் முறையில் நடைபெறும் என்றும் கூறினார்.

உலக நாடுகள் பின்பற்றும் ‘ஸ்டெம்’ (STEM) முறையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் இடம்பெறுகின்றன. தமிழகத்தில் இதனுடன் கலை (Arts) சேர்த்து ‘ஸ்டீம்’ முறையாக மாற்றப்படுவதாகவும், கலை வழியாக மனிதநேயம் மற்றும் பண்புகள் கற்றுத் தரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாடப்புத்தகங்களில் எழுத்துகள் குறைத்து வண்ணப்படங்கள் அதிகரிக்கப்படும்; அதில் உள்ள QR கோடு மூலம் ஸ்கேன் செய்தால் தொடர்புடைய வீடியோக்களை பார்க்கும் வசதி இருக்கும் என்றார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான நுணுக்கங்களும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் என்று கூறினார்.

இதே போன்ற பாடத்திட்ட அம்சங்கள் மூன்றாம் வகுப்பு வரை ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டதாகவும், தற்போது 4 முதல் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்களிடையே செய்தித்தாள் வாசிப்பு குறைந்துள்ளதால், ஒவ்வொரு பள்ளியிலும் செய்தித்தாள் வாசிப்புக்கென நேரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.