சென்னையில் இருந்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், டாஸ்மாக் பார்களில் பீடி மற்றும் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய அறிவுறுத்தல்களில், தண்ணீர் பாட்டில் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிக விலையில் விற்பனை செய்தால் சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தின்பண்ட உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் விலைப்பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு தெளிவாக வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் அரசின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்; அவை உணவுப் பொருள் தரக்கட்டுப்பாடு சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐ சான்று பெற்ற குளிர்பானங்கள் மற்றும் குடிநீரையே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பார்களில் வைத்திருக்கக் கூடாது; நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கடைகளைத் திறக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.