டில்லியில் நடந்த மாணவர் போராட்டத்தை கலைக்க அளவுக்கு அதிகமான போலீசார் குவிக்கப்பட்டது ஏன் என்பதை விளக்குமாறு மத்திய அரசு மற்றும் டில்லி போலீசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. நான்கு வாரங்களுக்குள் பதில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தரில், ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. ஜூலை 20 அன்று பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது போலீசார் அனுமதி மறுத்ததாகவும், தடுப்பு அரண்களை தாண்ட முயன்றபோது மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் தரப்பில், போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியதால் 118 போலீசார் காயமடைந்ததாகவும், பொது சொத்துகள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தி கூட்டத்தை கலைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், போலீசார் அளவுக்கு மீறி பலம் பயன்படுத்தியதாகவும், 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்ததாகவும் வாதிட்டனர். பெயர் பேட்ஜ் அணியாத சீருடை போலீசார் மற்றும் சாதாரண உடையிலிருந்தவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரணை கோரினர்.
தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அமர்வு, வழக்கின் உண்மைத் தன்மை குறித்து இப்போது கருத்து கூற முடியாது என தெரிவித்ததுடன், போலீஸ் குவிப்பின் காரணம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள், உடலில் அணிந்த கேமரா பதிவுகள் உள்ளிட்ட அனைத்து வீடியோ ஆதாரங்களையும் அழிக்காமல் பாதுகாக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 11க்கு ஒத்திவைத்தது.




