தேசிய தலைநகரில் நடைபெறும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சில “சுயநல சக்திகள்” தங்களின் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றன என டில்லி பல்கலைக்கழகம் கவலை தெரிவித்துள்ளது.

பல்கலை வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களின் கவலை மற்றும் வேதனையை தாம் உணர்கிறோம் என கூறியது. அவர்களின் அச்சங்களை நீக்க உதவுவதற்குப் பதிலாக, சிலர் நிலைமையை தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டது.

டில்லியில் ஒரு மாணவர் அமைப்பு போராட்டத்தை தொடரும் நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அந்த அழைப்பை அவர்கள் ஏற்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உடனடி தேவையாக நிலைமையை அமைதிப்படுத்தி, மாணவர்களின் மன உளைச்சலை குறைப்பதே முக்கியம் என பல்கலை கூறியது. அப்போதுதான் மாணவர்கள் தங்கள் படிப்பிலும் எதிர்காலத்திலும் உண்மையாக கவனம் செலுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.