விளாத்திக்குளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதல்வர் விஜயின் “முதுகெலும்பை உடைப்பேன்” என மிரட்டும் தொனியில் பொது வெளியில் பேசியதாக கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளனர். இதன் மூலம் அரசியல் பேச்சின் எல்லை, நாகரிகம் மற்றும் பொறுப்புணர்வு குறித்து மீண்டும் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
கோவையில் பலர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மிரட்டும் வகையிலான பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சரியே என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும், கைது குறித்து மட்டும் பேசாமல், கட்சியினரின் தவறான பேச்சை கட்சி தலைமை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதே நேரத்தில், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது குடிமக்களின் உரிமை என்றும், அதற்காக கைது செய்வது தவறு என்றும் சிலர் கூறினர். இருப்பினும், வெறுப்பு அல்லது வன்முறையை தூண்டும் சொற்களை தவிர்த்து அனைத்து கட்சிகளும் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் பலரிடமிருந்து எழுந்தது.





